Search This Blog

Sunday, July 2, 2023

புற்றுநோயை வருவதற்கான ஆபத்துக் காரணிகள் என்ன?

 4.புற்றுநோயை வருவதற்கான ஆபத்துக் காரணிகள் என்ன?

புற்றுநோய் வளர்ச்சி என்பது பல்வேறு காரணிகளால் பாதிக்கப்படும் ஒரு சிக்கலான செயல்முறையாக இருப்பதால், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆபத்து காரணிகளைக் கொண்டிருப்பதால் மட்டும் ஒருவருக்கு புற்றுநோய் உறுதியாக வரும் என்பது அர்த்தமல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். புற்றுநோயுடன் தொடர்புடைய சில பொதுவான ஆபத்து காரணிகளாகச் சொல்லப்படுவதில் சிலவற்றை கீழே காண்போம்

வயது: செல்களில் ஏற்படும் மாற்றங்கள் காலப்போக்கில் குவிந்து வருவதால் புற்றுநோய் வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது. ஆனால் எல்லா வயதானவர்களுக்கும் புற்றுநோய் வரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

மரபணு காரணிகள்: சில பரம்பரை மரபணு மாற்றங்கள் புற்றுநோய் வருவதற்கான காரணங்களாக அறியப்படுகிறது. மார்பக மற்றும் கர்ப்பப்பை புற்றுநோயில் BRCA1 மற்றும் BRCA2 மரபணுக்களில் ஏற்படும் பிறழ்வுகள் போன்றவை புற்றுநோய் வருவதற்கான சாத்தியக் கூறுகளாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இந்த மரபணு மாற்றங்கள் உள்ள அனைவருக்கும் மார்பகம் அல்லது கர்ப்பப்பை புற்றுநோய் வரும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

குடும்ப வரலாறு: நெருங்கிய உறவினர்களுக்குப் புற்றுநோய் பாதித்திருந்தால் (பெற்றோர்கள், உடன்பிறந்தவர்கள், குழந்தைகள்) புற்றுநோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகரிக்கலாம். இது பகிரப்பட்ட மரபணு அல்லது சுற்றுச்சூழல் தாக்கங்களால் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

சுற்றுச்சூழல் காரணிகள்: புகையிலை புகை, சில இரசாயனங்கள், கதிர்வீச்சு மற்றும் காற்று மாசு போன்ற சுற்றுச்சூழல் தாக்கங்களால் புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும்.

வாழ்க்கை முறை தேர்வுகள்: புகையிலை பயன்பாடு, அதிகப்படியான மது அருந்துதல், தவறான உணவுமுறை (பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகமாக உட்கொள்ளுதல் மற்றும் பழங்கள், காய்கறிகளை குறைவாக எடுத்துக் கொள்ளுதல்), தொடர்ந்த உடற்பயிற்சி இல்லாமை மற்றும் உடல் பருமன் போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்கள் அதிக புற்றுநோய் அபாயத்திற்குப் பங்களிக்கின்றன.

சூரிய ஒளி: சூரியன் அல்லது தோல் பதனிடுதல் படுக்கைகளில் ((tanning beds) இருந்து புற ஊதா (UV) கதிர்வீச்சுக்கு அதிகப்படியான வெளிப்பாடு தோல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.

நாள்பட்ட அழற்சி: அழற்சி குடல் நோய் (inflammatory bowel disease) அல்லது நாள்பட்ட கல்லீரல் வீங்கும் நோய் (Hepatitis) போன்ற சில நாள்பட்ட அழற்சி (inflammation) நிலைகள் குறிப்பிட்ட புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம்.

இயக்குநீர் (Hormones) காரணிகள்: இயக்குநீர் ஏற்றத்தாழ்வுகள், இயக்குநீர் மாற்று சிகிச்சையின் நீண்டகால பயன்பாடு (hormone replacement therapy), மாதவிடாயின்  ஆரம்ப நிலை, தாமதமான மாதவிடாய் நிறுத்தம் அல்லது கர்ப்பம் அடையாமலே இருப்பது போன்றவை புற்றுநோய் அபாயத்தை தூண்டுவதற்கான காரணிகளாக அறியப்படுகிறது.

பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு (Weakened immune system) : மனித நோயெதிர்ப்புக்குறை தீ நுண்மம்  (Human immuno deficiency virus–HIV)/ ஏமக்குறைவு நோய்த்தொகை (acquired immune deficiency syndrome-AIDS) நோயால் பாதிக்கப்பட்டவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை பெறுபவர்கள் (organ transplantation) அல்லது நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகளை உட்கொள்பவர்கள் போன்ற பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்புகளைக் கொண்டவர்களுக்கு சில புற்று நோய்கள் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கும்.

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆபத்து காரணிகளைக் கொண்டிருப்பது புற்றுநோயின் வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்காது என்பதை நினைவில் கொள்வது அவசியம், மேலும் வெளிப்படையான ஆபத்துக் காரணிகள் இல்லாத சில நபர்களுக்குக் கூட புற்றுநோய் வரலாம். வழக்கமான பரிசோதனைகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகள் மற்றும் முன்கூட்டியே கண்டறிதல் ஆகியவை புற்றுநோய் வருவதற்கான ஆபத்தைக் குறைக்கவும் மற்றும் வரும் விளைவுகளை கட்டுப்படுத்தவும் உதவும்.

Search This Blog