ஒரு ஆண்டு நிறைவுற்றது!!
பூமியில் நாம் பல இடங்களைச் சுற்றி வந்தாலும்
ஆகாய ஊர்தியில் பூமியையே பல முறை சுற்றி வந்தாலும்
இயற்கையாகவே நாம் சூரியனைச் சுற்றி வரும் பயணம் நிறைவுற்று,
அடுத்த சுற்று தொடங்கும் நாள்
அடுத்த பயணத்தின் முதல் நாள்
கடந்து வந்த பயணத்தில்
காட்சிகள் மாறின
ஆட்சிகள் மாறின
காலநிலைகள் மாறின
பண்டிகைகள் வந்தன
பல நோன்புகள் வந்தன,
பேரிடர்கள் நிகழ்ந்தன
பெரும்போர்கள் ஓய்ந்தன
பெருந்தலைவர்கள் மறைந்தார்கள்
வாழ்க்கையை மாற்றும்
பல கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தன
சக பயணிகள் சிலர் உடன் வருவார்கள்
சில பயணிகள் பயணத்தை முடித்துக்கொண்டார்கள்
பல புதிய பயணிகள் சேர்ந்துகொண்டார்கள்
ஓர் வட்டப்பாதையில்
அடுத்தடுத்து பயணித்தாலும்
பயணம் செய்த பாதைதான் என்றாலும்
சலிக்காத பயணம்
எத்தனை துன்பங்கள் வந்தாலும்
மீண்டும் மீண்டும் தொடர
ஆசைப்படும் பயணம்
ஆதவன் உள்ளவரை அனுதினமும் தொடரும்
இப்புதிய பயணம் இனிதாக அமைய வேண்டும்
இன்னல்கள் இல்லாமல் இன்பமாக அமைய வேண்டும்
தீவிரவாதத்தால் ஏற்படும் அழிவு நீங்கி
தீவிரவாதம் அழிய வேண்டும்
பகுத்தறிவு செழிக்கவேண்டும்
எண்ணெய்க்காகப் போராடாமல்
எல்லோருக்காகவும் போராடவேண்டும்
அன்றாட வாழ்க்கையில், அரசியலில், இன்னும் பல
மாற்றங்கள் வேண்டுகிறோம்
அது நம்மிடம் இருந்தே தொடங்கட்டும்
முதல் நாளில் முழு நம்பிக்கையுடன் தொடங்குவோம்
மனிதநேயத்துடன் வாழ்வோம், வளம் பெறுவோம்
வாழ்த்துக்களுடன்
அன்பன்
ப .நல்லசிவம் , ஜனவரி 1 2016