Search This Blog

Sunday, March 15, 2026

சமத்துவ பிரபஞ்சம்

 சுவாசிக்கும் காற்றுக்கு சாதியில்லை,

உயிர் வளம் தந்து அனைவரையும் வாழ வைக்கிறது.

குடிக்கும் நீருக்கும் சாதியில்லை,

தாகம் தீர்ப்பதில் தரம் பிரிப்பதில்லை.

வசிக்கும் மண்ணுக்கும் சாதியில்லை,

சுமப்பதில் பாரபட்சம் காட்டுவதில்லை.

வளர்க்கும் தீயுக்கும் சாதியில்லை,

தன்னைத் தீண்டுபவர் யாரெனத் தேடுவதில்லை.

விரிந்த ஆகாயத்துக்கும் சாதியில்லை,

விரிந்த மனப்பான்மையுடன் அனைவரையும் அரவணைக்கிறது.

நான்கு திசைகளில் வேற்றுமை இல்லை,

பஞ்சபூதங்களில் வேற்றுமை இல்லை,

ஐம்புலன்களில் வேற்றுமை இல்லை.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என

ஐந்திணைகளும் பொதுவானவை

ஆறு காலங்களும் பொதுவானவை,

ஏழு ஸ்வரங்களும் பொதுவானவை,

எட்டுத் திசைகளும் பொதுவானவை,

நவகோள்களும் பொதுவானவை.

இதனுள் அடங்கிய மனிதா,

ஆறறிவு கொண்டவன் மனிதன் என்றாய்,

அறிவினால் உயர்ந்து நின்றவன் என்றாய்.

அறிவின் பயனே பிரிவினை தானா?

பகுத்து அறிவதே பழிப்பதற்கா?

உன்னுள் மட்டும்

எப்படி இந்தப் பிரிவினை சிந்தனை வந்தது?

.ந.ப.

Search This Blog