Search This Blog

Sunday, May 8, 2022

திருக்குறளில் நாடு

திருக்குறளில்
நாடு

பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: நாடு: 
குறள் எண்: 731

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு

மழை இல்லாத காலத்தில் கூடப் பயிர் செய்யுமளவுக்கு சிறந்த வளமுடைய நிலங்களும், ஓயாமல் உழைத்து உற்பத்தியைப் பெருக்கும் உழைப்பாளர்களும், அறவழியில் வாழும் சிறந்த குடிமக்களும், தேடிச் சேர்த்த செல்வத்தைத் தீய வழிகளில் செலவிடாத செல்வந்தர்களும் ஒருங்கே அமையப் பெற்றால் அதுவே சிறந்த நாடாகும்.

                                                            🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽


பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: நாடு: 
குறள் எண்: 732

பெரும்பொருளாற் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு

மிகுந்த செல்வச் செழிப்பும், வேற்று நாட்டவர்களாலும் விரும்பிப் போற்றுதலுக்குரியதும், உயிரினங்களுக்கு எந்தவிதமான துன்பங்கள் இல்லாமலும், அதிக விவசாய விளைச்சலைக் கொண்டதாக அமைந்த நாடே சிறந்த நாடு.


                                                            🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽

பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: நாடு: 
குறள் எண்: 733

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்
கிறையொருங்கு நேர்வது நாடு

நாட்டில் அசாதாரண சூழலில் அரசுக்கு சுமை வரும்போது அதைத் தாங்கிக் கொண்டு அரசுக்கு உரிய வரிவகைகளைச் செலுத்தி சுமையிலிருந்து விடுபடும் அளவுக்கு வளம் நிறைந்ததே சிறந்த நாடாகும்.

                                                            🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽

பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: நாடு: 
குறள் எண்: 734

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு

பசி, பட்டினி, நோய், பிற நாடுகளுடன் பகை இல்லாமை, இப்படிப்பட்ட நாடு தான் சிறந்த நாடு என்று பெருமை பெறும்.

                                                            🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽


பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: நாடு: 
குறள் எண்: 735

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு

மக்கள் பல குழுக்களாகப் பிரிந்து அரசுக்கு எதிராகச் செய்யும் புரட்சியும், உள்நாட்டு அரசியல் குழப்பங்கள், அரசனை நிம்மதி இல்லாமல் செய்கின்ற கொலை கொள்ளையில் ஈடுபடும் கீழ்த்தரமான மக்களும் இல்லாமல் இருக்கும் நாடே சிறந்த நாடாகும்.
                                                            🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽

பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: நாடு: 
குறள் எண் 736

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை

பகைவர்களின் கெடுதல் இல்லாமல் வளமுடன் இருக்கும் நாடு ஏதோ ஒரு வகையில் கெடுதல் ஏற்பட்டாலும் அதனைத் தாங்கி நின்று மீண்டு வருவதற்குரிய வளம் குறையாமல் இருக்கும் நாடுதான் எல்லா நாடுகளிலும் சிறந்த நாடாக போற்றப்படும்.
                                                            🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽


பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: நாடு: 
குறள் எண்: 737

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற் குறுப்பு

வற்றாத நதிகளில் ஓடும் நீரும், நிலத்தடி நீரின் மிகுதியால் வரும் ஊற்று நீரும் ஆகிய இருவகை நீர்வளமும், ஓங்கி உயர்ந்த மலைத்தொடர்களும் அந்த மலைத் தொடர்களிலிருந்து தொடர் மழையால் ஆறாக ஓடி வரும் நீரும், பகைவர்களால் நெருங்க முடியாத பாதுகாப்பான எல்லைகளும்தான் ஒரு சிறந்த நாட்டின் முக்கிய உறுப்புகளாகக் கருதப்படும்.

                                                            🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽

பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: நாடு: 
குறள் எண்: 738
பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து

நாட்டில் வாழும் உயிரினங்களுக்கு நோய் இல்லாமல் இருத்தல், பெரும் செல்வம், மிகுதியான விளைச்சல், மக்கள் மகிழ்ச்சியாக வாழும் இன்ப நிலை, நல்ல பாதுகாப்பு, இவை ஐந்தும் ஒரு நாட்டுக்கு எல்லோராலும் விரும்பப்படும் அழகு சேர்ப்பவையாகும்.

                                                            🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽

பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: நாடு: 
குறள் எண்: 739
நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு

எல்லா வளங்களும் இயற்கையாக அமைந்து தேடாமலே எல்லா வளங்களும் கிடைக்கப்பெற்ற நாடே சிறந்த நாடு என்பார்கள். இயற்கை வளங்கள் இல்லாமல் தேடித்தேடி உழைத்து வளம் சேர்க்க பெறும் நாடு சிறந்த நாடாகாது.
                                                            🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽

பொருட்பால்: அங்கவியல்: அதிகாரம்: நாடு: 
குறள் எண்: 740
ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு

இயற்கையான எல்லா வளங்களும் நிறைந்திருந்தாலும் குடிமக்கள் மீது அக்கறை கொண்டு நல்ல அரசாட்சி செய்யும் அரசன் அமையாவிட்டால் எல்லா வளங்கள் இருந்தாலும் அதனால் எந்தப் பயனுமில்லை.

                                                            🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽🗽



Search This Blog